மயிலாடுதுறைையைச் சேர்ந்த இந்திய கைப் பந்து வீராங்கனைக்கு லயன்ஸ் சங்கம் பாராட்டு
மயிலாடுதுறைையைச் சேர்ந்த இந்திய கைப்பந்து வீராங்கனை இந்திராணிக்கு செண்ட்ரல் லயன்ஸ் சங்கம் பாராட்டு விழா நடத்தியது.;
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ் என்பவரின் மகள் இந்திராணி(21). பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திராணி, கல்லூரியில் கைப்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்தார்.
கைப்பந்து போட்டியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்ற இந்திராணி தற்போது, கல்லூரி முடிவடைந்ததையொட்டி குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றதுடன், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழகத்துக்காக விளையாடிய இந்திராணி அப்போட்டியில் தங்கம் வென்றதுடன் சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
பின்னர், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் நிதி உதவியுடன் ஏப்ரல்; 29, 30 ஆகிய இரண்டு நாட்;கள் நேபாளில் நடைபெற்ற சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடிய இந்திராணி, இதில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இந்நிலையில்,
பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய இந்திராணிக்கு மயிலாடுதுறை நகராட்சி நூலகத்தில் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள் அடுத்த ஆண்டு முழுவதும் இந்திராணியின் விளையாட்டுக்கு ஆகும் முழுச் செலவு மட்டுமின்றி அவரது கல்விச் செலவினையும் மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.