மயிலாடுதுறையில் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு வலைகூண்டு பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளவரை வலைகூண்டு அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கேணிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை, அரசு பேருந்து பணிமனை முன்பு அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு கருதி நகராட்சி சார்பில் வலைகூண்டு அமைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியாரிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் விதமாக பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு வலைகூண்டு அமைக்கும் பணியை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.