பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் பேரணி
மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் பிரமாண்டமாக நடைபெற்ற சீருடை கொடி அணிவகுப்பு பேரணிக்கு இஸ்லாமியர்கள் மலர்தூவி வரவேற்பு. ஏராளமான போலீசார் பாதுகாப்பு.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உதய தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியை, அவ்வமைப்பினர் இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் 'தேசத்தை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்ட் உடன் நிற்போம்" என்ற முழக்கத்துடன் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கிய ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை அவ்வமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் கொடியசைத்து துவக்கிவைத்து, அமைப்புக் கொடியினை அணிவகுப்பு தலைவர் ஹெச்.ஜியாவுல் ஹக்கிடம் கொடுத்து கௌரவித்தார். அதனை தொடர்ந்து கொடி அணிவகுப்பின் தலைவர் பி.ஹாலித் அவர்கள் தலைமையில் பிரமாண்டமான கொடி அணிவகுப்பு பேரணி கச்சேரி சாலை, திருவாரூர் சாலை வழியே சென்று காயிதே மில்லத் திடலை வந்தடைந்தது. பேரணியின் போது வழிநெடுகிலும் இஸ்லாமிய மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, பொதுக்கூட்ட திடலில் சீருடை அணிந்த அமைப்பின் செயல்வீரர்கள் ரிங் மார்ச் நடத்தினர். அதன் பின்னர் ஒற்றுமை கீதத்துடன் பொதுக் கூட்டம் துவங்கி நடைபெற்றது. கொடிஅணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்த்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.