இலவச சைக்கிள்களில் சாதிவாரி டோக்கன்
அரசு பள்ளியில் அளிக்கப்படும் இலவச சைக்கிள்களில் சாதிவாரி டோக்கன் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்ட போது, அதில் மாணவிகளின் பெயருடன் அவர்களின் சாதிப் பிரிவும் குறிப்பிட்டு டோக்கன் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்ட மாணவிகளும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிகளில் சாதிகள், பிரிவினைகள் இருக்கக் கூடாது என நாள்தோறும் போதித்து வரும் போது, சாதி பெயரை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டது, மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட இதில் சம்பந்தப்பட்டவர் அனைவரது மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.