மதுரை தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறக்கப்படும் சு.வெங்கடேசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்டேசன் குறித்த தகவல்கள்;
2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நெடும் வரலாற்றைக் கொண்ட இந்த பழம்பெரும் நகரான இந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 15 லட்சத்து 76 ஆயிரத்து 745 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 381 பேர் ஆண்கள், 8 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் பெண்கள், 188 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். மதுரை நாடாளுமன்றத் தொகுதி மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மதுரை மத்தி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாட்டை பெரும்பாலும் திராவிட கட்சிகளே ஆண்டிருந்த போதிலும், 32-ஆவது நாடாளுமன்றத் தொகுதியான மதுரையை பெரும்பாலும் தேசியக் கட்சிகளே கைப்பற்றியுள்ளது. 15-ஆவது மக்களவைத் தேர்தலில் வென்ற திமுகவின் அழகிரி மற்றும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் வென்ற அதிமுகவின் கோபாலகிருஷ்ணனைத் தவிர, மதுரை தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா உள்ளிட்ட தேசியக் கட்சிகளே பலமுறை வென்றுள்ளன. இடையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருந்தது.
மதுரை தொகுதியின் 17வது நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் எழுத்தாளராக அறியப்படுபவர். 1996, 2001 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். 2006ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வி.வி.ஆர்.ராஜ் சத்யனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் கூடுதலாக பெற்று சு.வெங்கடேசன் மக்களவை உறுப்பினரானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், தற்போதைய மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், மீண்டும் இதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 34 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 33 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது சங்கத்தின் மதிப்புறு தலைவராக பணியாற்றி வருகிறார்.
2011ஆம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வார இதழில் 119 வாரம் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வு குறித்து மக்கள் அறிந்து கொள்ள பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி தகுதி பெற பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். தமிழ் மொழி தொடர்பான தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டு இருந்துள்ளார். மொழித் திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி உரிமை, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இந்தியாவிலேயே போட்டித்தேர்வு மாணவர்களுக்கான தனித்த பூங்கா அமைத்தது, ரயில்வே சார்ந்த கோரிக்கைகள், கோவிட் பேரிடர் காலத்தில் அன்னவாசல் உள்ளிட்ட முன்னுதாரணமான பணிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நைபர் ஆராய்ச்சி மையத்திற்கு தொடர் போராட்டம், மதுரை விமான நிலைய விரிவாக்கம், ரயில் போக்குவரத்து, மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மதுரை தொழில் வளர்ச்சிக்கான தலையீடுகள், ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற்றுத்தந்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தியது, ஐ.ஐ.டி. நிறுவனம் உள்ளிட்டு சமூக நீதிக்காகக் குரல் எழுப்பியது என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.