உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளி கர்ப்பிணி பெண் இறப்பு..!
பார்வையற்ற கர்ப்பிணிப் பெண் இறப்பு. கணவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
பார்வையற்ற கர்ப்பிணி இறப்பு கணவர் கைது
உசிலம்பட்டி :
உசிலம்பட்டி அருகே, பார்வையற்ற கர்ப்பிணி பெண் மர்ம மரணம் - சந்தேகத்தின் பேரில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செக்காணூரணியை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மனைவி ரவீனா பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ள சூழலில் இரண்டாவதாக ரவீனா கருத்தரித்து தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்., திருமணம் முடிந்த காலம் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தாகவும், செக்காணூரணி காவல் நிலையம், உசிலம்பட்டி மகளீர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணைக்கு பின் சமீப காலமாக தான் கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை கணவன் சின்னராஜ் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்றுவிட கர்ப்பிணியான ரவீனா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
அங்கு ரவீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ரவீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக,உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரவீனாவின் தந்தை ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் சின்னராஜ்-யை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ரவீனா கர்ப்பிணியாக இருந்த போது மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.