உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
உசிலம்பட்டி அருகே குடிநீர் சாலை வசதி கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு இருளப்பத்தேவர் தெருவில் சுமார் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் சிதிலமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு இருபுறமும் நீண்ட வரிசகையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விரைவில் சாலை உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
கிராம மக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.