உசிலம்பட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகை

கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.;

Update: 2021-10-07 16:22 GMT

உசிலம்பட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை, பொதுமக்கள் முற்றுகை

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியும், உடனடியாக அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக ,கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், 2016 முதல் 21 வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்து முறைகேடு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பினாமி பெயரில் ,கடன் பெற்று தள்ளுபடி செய்துள்ளதாகவும், விவசாயம் அல்லாத நிலத்திற்கு கடன் பெற்று தள்ளுபடி செய்துள்ளதாகவும், உறவினர் பெயரில் அருகில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று தள்ளுபடி மூலம் பயன் பெற்றதாகவும் ஆனால், பொதுமக்கள் நேரில் சென்று கடன் கேட்டால் ,கடன் வழங்க மறுப்பதாகவும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறும்போது: கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள அதிகாரி பொதுமக்களுக்கு எதிராக செயல்படுகிறார். உயர் அதிகாரிகளின் துணையுடன் கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகளை செய்து வருகிறார். உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கிறார். கருவேல மரங்கள் வளர்ந்த இடங்களுக்கு விவசாய நிலங்கள் என கடன் பெற்று அதை தள்ளுபடி செய்து முறைகேடு செய்துள்ளார். 2006 முதல் 2011 வரை பல முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். 2006-இல் ஒரு வருடத்தில் மட்டும் 6 முறை பினாமி பெயரில் கடன் பெற்று அதை தள்ளுபடி செய்து முறைகேடு செய்துள்ளார். ஆகையால், உடனடியாக அந்த அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி நேர்மையானஅதிகாரியை எங்கள் கிராமத்திற்கு கொண்டு வர வேண்டும் .

மேலும், உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்கி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்காததால், இரண்டாம் போகத்திற்கு தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் விவசாய பணியை தொடங்க முடியாத சூழல் உள்ளது.

இதுகுறித்து, சமீபத்தில் பாப்பாபட்டிக்கு வந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சரிடம் மனு அளித்தும் ,இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், ஏற்கெனவே எங்களுக்கு வழங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்த பின்பும் ,அதற்கான சான்றிதழை வழங்க மறுக்கிறார். இதனால், புதிதாக கடன் பெற முடியாமல் விவசாய பணிகளை தொடங்க இயலாத சூழல் நிலவுகிறது. ஆகையால், உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News