உசிலம்பட்டி அருகே மரங்கள் வெட்டி சாய்ப்பு: பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
உசிலம்பட்டி அருகே மரங்கள் வெட்டி சாய்க்கப் பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்
உசிலம்பட்டி அருகே முன்விரோதத்தில் தென்னை மரங்களை வெட்டிச்சாய்ந்த சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி அருகே உள்ளது பகாத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயத்தேவர், மீனாட்சி. இவர்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் இரவு தோட்டத்திற்குள் புகுந்து 8க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு, தப்பினர். வழக்கம் போல் மீனாட்சி மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது தென்னை மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டிருந்ததும் கொட்டைகையில் கட்டப்பட்டிருந்த ஜல்லிகட்டு காளை, இரு கோழிகள் இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதில், தென்னை மரங்களை வெட்டிய அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(60). என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கணவர் சடையன்(65), மகள்கள் ஜெயந்திமாலா (40), மலர்விழி (42) மற்றும் மகன் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.