தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்;

Update: 2023-09-30 10:30 GMT

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் இந்து பள்ளிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஹிந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவரும் கும்பகோணம் பாணாத்துறை மேல்நிலைப் பள்ளி செயலருமான டி.ஆர். சுவாமிநாதன், தலைமையேற்று நடத்தினார்.  சங்கத்தின் செயலர் தவத்திரு சுவாமி நியாமனந்த மகராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

சங்கத்தின் துணைத் தலைவர்கள் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், எம்.கணேசன்,எம்.அப்பர் மற்றும் எஸ்.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், திருப்பராய்த்துறை, இராமகிருஷ்ண தபோவனத் தலைவர் தவத்திரு சுவாமி சுத்தானந்த மகராஜ், சங்க பொருளாளர் தவத்திரு சுவாமி பரமானந்த மகராஜ் ஆகியோர் ஆசி உரையாற்றினார்கள். தமிழகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் வரவு செலவு பற்றிய விவரங்களை சங்கத்தின் மாநில தலைவர் டி.ஆர். சுவாமிநாதன் வாசித்தார். இக்கூட்டத்தில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்புதல் மற்றும் ஏற்கெனவே, முறையான அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி உடன் ஒப்புதல் வழங்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று சட்டம் 2018 புனரமைக்கப்பட்ட விதி 2023-ல் உள்ள சில பகுதிகள் உதவி பெறும் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதிகளை தமிழக அரசு நீக்க  வேண்டும்.

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.  அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூபாய் 1000 மற்றும் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள பராமரிப்பு மானியத்தை விரைந்து வழங்கிட வேண்டும்.  அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் கணினி, பிரிண்டர், இன்டர்நெட் போன்றவை வழங்கியவை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் . பள்ளி தொடர்பான கடிதப் போக்குவரத்துகளை பள்ளி தாளாளர்/செயலர் மட்டுமே அனுப்ப பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனரை  வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிறைவாக சங்கத்தின் செயலர் கே. செந்தில்குமரன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News