மதுரையில் சிறு, குறு தொழில் கடன் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியர்
பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 % சலுகை அளிக்கப்படும்;
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில், செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் , கடனுதவிக்கு அப்பாற்பட்டு தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கங்கள், தொழில் திட்ட ஆலோசகர்கள் மற்றும் (சுற்றுப்புற சூழல் மேலாண்மை) தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை பெற உதவுதல் போன்ற தொழில்முறை சிரமங்களை கலைவதற்கும் , வருங்கால தொழில் நிலைத்தலுக்கும் உறுதுணையாக உள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 2023 வரும் 21.08.2023 முதல் 01.09.2023 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில், டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம்
வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 2535 முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும்
பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு பிளாட் எண்:14 ,அம்பேத்கர் சாலை, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில், மதுரை-625 020 என்ற முகவரியில், இயங்கி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தை நேரிலும், அல்லது தொலைபேசி மற்றும் அலைபேசி எண். (87780 40572 மற்றும் 0452 2533331)-க்கு தொடர்பு கொண்டும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.