விக்கிரமங்கலத்தில் புரட்டாசி பொங்கல் விழா: பக்தர்கள் வழிபாடு
விக்கிரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாள் முதல் இப்பகுதி உள்ள கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர்.முதல் நாள் மேளதாளத்துடன், வானவேடிக்கையுடன் பூசாரி வீட்டிலிருந்து சாமி பெட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, சக்திகிரகம் எடுத்து வருதல். பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து கோவிலில் வந்து அடைந்தனர்.
இங்கு சிறப்பு பூஜை நடந்தது.இப்பகுதி கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்ட னர்.இரண்டாம் நாள் காலை கிராமமக்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். காலை பக்தர்கள் பால்குடம், மதியம் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.
மூன்றாம் நாள் சக்தி கிரகம், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று மதியம் சாமி பெட்டி பூசாரி வீட்டுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு, விக்கிரமங்கலம் ஊராட்சியில் இருந்து கூடுதலாக குடிநீர், தெரு விளக்கு, தூய்மை பணி ஏற்பாடு செய்து இருந்தனர்.விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந் தனர்.