மதுரை அருகே ஒரே நாளில் 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததால் பரபரப்பு

சோழவந்தான் அருகே நடந்த இச்சம்பவத்தில் நாய்களுக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டி ருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின் றனர்

Update: 2023-03-14 00:30 GMT

மதுரை அருகே நாய்களுக்கு  விஷம் கலந்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உணவுப்பொருள் 

மதுரை  மாவட்டம்,  சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் ஒரே நாளில், 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து  கொல்லப்பட்ட சம்பவம்  அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் இறந்த நாயின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை கால் நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷம் கலந்த உணவை மர்ம நபர்கள் ஆங்காங்கே வீசியதால் அதனை சாப்பிட்ட நாய்கள் உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, மயில்,நாய்கள், சாலையில் திரியும் காளைகள் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் விஷம் வைக்கும் சம்பவமானது தொடர் கதையாகவே உள்ளது. இதை தடுக்க பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை, விலங்குகள் நல வாரியம் ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்திழ் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி, பிராணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  விலங்குகள் நல ஆர்வலர்கள்  வலியுறுத்துகின்றனர். 

இது குறித்து பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பிராணிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசின் சுற்றுப்புறத் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள பிராணிகள் நல அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த சங்கங்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் துணை த்தலைவர்களாக மாநகர காவல்துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆகியோரும், செயலாளராக மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநரும் செயல்பட்டனர்.

நிர்வாக செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநரும், நிர்வாக துணைச் செயலாளராக கால்நடை உதவி மருத்துவரும், செயற்குழு உறுப்பினர்களாக மாநகராட்சி ஆணையர், கோட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வனத்துறை அதிகாரி, துணை இயக்குநர்(பொது சுகாதாரம்), சுகாதார அலுவலர் (மதுரை மாநகராட்சி) மற்றும் பிராணிகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்த பிராணிகள் வதை தடுப்பு சங்கங்களின் செயல்பாடுகள்  முடங்கிப் போயுள்ளதோ என்று நினைக்கத் தோன்றுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News