உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!

உசிலம்பட்டி அருகே, வெள்ளரிக்காய் விலை போகாததால், செடியிலேயே மாடுகளுக்கு இரையாகி வருகிறது.

Update: 2024-05-21 17:31 GMT

வெள்ளரிக்காய் விலை  போகதால், விவசாயிகள் ,தோட்டத்தில், மாடுகளை  மேய விட்டுள்ளனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பொட்லுப்பட்டி, ஆரியபட்டி ,உச்சப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளரிக்காய் விவசாயம் செய்துள்ளனர்.


இவை, நன்கு விளைச்சலைக்கண்டுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை, வியாபாரிகள் வெள்ளரி விவசாயம் செய்துள்ள தோட்டத்திலேயே, வந்து 50கிலோ அடங்கிய வெள்ளரி மூட்டையை ரூ.3000 முதல் ரூ4000 வரை விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

ஆனால், தற்போது உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த 3 தினங்களாக மாலை வேளையில் பெய்து வரும் தொடர் மழையினால் வெள்ளரியை வாங்க வியாபாரிகள் வருவதில்லை.  வெள்ளரி விவசாயிகள் வெள்ளரியை பறித்து சாலையின் ஓரத்தில் விற்றாலும், வாங்க ஆளில்லை.

இதனால் ,விவசாயிகள் வெள்ளரியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு மாடுகளுக்கு இரையாக்கி வரும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.


எனவே ,தமிழக அரசு வெள்ளரி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாகவே மழைக்காலங்களில் எல்லா விவசாய விளைபொருட்களை விலை போகாமல் இருப்பது வாடிக்கையே. என்றாலும் இதுபோன்ற இக்கட்டான காலங்களில் அரசு முடிந்தவரை இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, பல்வேறு பிரச்னைகளை சந்தித்துத்தான் நாங்கள் விவசாயம் செய்கிறோம். ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது சில எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட்டுவிடுகிறது. அதேபோலத்தான் வெள்ளரி சாகுபடியும். தொடர் மழை காரணமாக வியாபாரிகள் வராததால் எங்கள் மாடுகளுக்கே உணவாக்கிவிட்டோம். 

இந்த ஆண்டு வெள்ளரி சாகுபடியில் இந்த பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களின்  சூழலைக் கருதி தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். 

Tags:    

Similar News