உரிமம் பெற்ற கடைகளில் தீபாவளி தின்பண்டங்கள் வாங்க அறிவுறுத்தல்
உணவு வணிகர்கள் தீபாவளிக்கு தயாரித்து விற்கும் இனிப்பு மற்றும் கார வகைகளில் செயற்கை வண்ணங்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்;
தீபாவளிக்கு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவு பண்டங்களை வாங்க வேண்டுமென உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவு பண்டங்கள் வாங்கும் பொழுது உணவு பாதுகாப்பு சட்ட உரிமம் பெற்றுள்ள கடைகளில் மட்டுமே வாங்கி பயன்படுத்துமாறும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி, பயன்படுத்துவதற்கான காலம், சைவ, அசைவ குறியீடுகள் உணவு பாதுகாப்பு உரிம எண். ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.
உணவு வணிகர்கள் தீபாவளியை முன்னிட்டு தயாரித்து விற்கும் இனிப்பு மற்றும் கார வகைகளில் செயற்கை வண்ணங்கள் சேர்ப்பதை தவிர்த்தும் ஏற்கெனவே, பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தாமலும் உணவு பொருள் தயாரித்து உரிய பாதுகாப்பான முறையில் மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். உணவு பொருள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் சுகாதாரம் பேணவும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும், மாவட்ட ஆட்சித்தலைவர், அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்புத்துறை கேட்டுக்கொள்கிறது.இதில், விதி மீறல்கள் ஏதேனும் காணப்படின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, உணவு பாதுகாப்பு துறையால் எச்சரிக்கப்படுகிறது.