உசிலம்பட்டி சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
உசிலம்பட்டி சந்தையில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்;
வைகாசி மாதத்தின் இறுதி முகூர்த்த தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது - மல்லிகை, கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மலர் சந்தையில் நாளை வைகாசி மாதத்தின் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால், பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, மல்லிகை பூவின் விலை கிலோ - 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் - 1000 ரூபாய்க்கும், பிச்சி மற்றும் முல்லை - 500 ரூபாய்க்கும், சம்பங்கி - 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் - 200 ரூபாய்க்கும், அரளி - 200 ரூபாய்க்கும், துளசி - 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் முதல் நேற்று வரை மல்லிகை, கனகாம்பரம் - 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பிச்சி, முல்லை உள்ளிட்டவை 100 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ரூபாய்க்கும், சம்பங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.