மதுரை அருகே ,உசிலம்பட்டியில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!
குறைய சொல்லப்போன விவசாயிகளிடம் குறையைச் சொல்லி பெருமூச்சு விட்ட கோட்டாட்சியர்.;
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளால் - எனது அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவே போராட்டமாக உள்ளது என உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி :
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தில் மதகுகளை சரி செய்ய வேண்டும், நகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குப்பைகள் எரியூட்டப்படுவதை தடுக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பெயர் பலகைகள் முறையாக இல்லை, சந்தைக்கு வரும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்நிலையில், தலைமையேற்று, நடத்தி கொண்டிருந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனும், பல்வேறு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நான், எனது அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளால்,எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாமலும், மாவட்ட நிர்வாகத்திடம் பதில் சொல்ல முடியாத நிலையில் தவிப்பதாக புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்,நகராட்சி நிர்வாகம் சாலையோர மற்றும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வியாபாரிகளை முறைப்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களை வழங்க வேண்டும் என, வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.