விக்கிரமங்கலம் அருகே தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்
விக்கிரமங்கலம் அருகே 100க்கும் மேற்ப்பட்ட தென்னை, தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், விவசாயி 70. வயதான இவர், கடந்த பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான இடத்தில் தென்னை மரங்களை வளர்த்து பாதுகாத்து வந்தார். அதில் வரும் வருவாயை வைத்து தனது குடும்பம் முழுமைக்கும் ஜீவனாம்சம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவரது தென்னந்தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென சுமார் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், தேக்கு மரங்களை வெட்டி சாய்த்து விட்டு சென்றுவிட்டனர். இதனால், மிகுந்த மன வருத்தத்தில் அவரது குடும்பம் உள்ளது. உயிருக்கு உயிராக பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டதை கண்ட அவரது குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. மரங்களை வெட்டிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் மற்றும் தங்களுக்கு இழப்பீடாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அவரது மகன் சண்முகவேல் மற்றும் பாண்டீஸ்வரி கூறியதாவது:- நாங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் தாத்தா காலம் முதல் எங்களுக்கு சொந்தமான இடத்தில் தென்னை மரம் வளர்த்து பாதுகாத்து வருகிறோம். இந்நிலையில், திடீரென மர்ம நபர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரம், தேக்கு மரங்களை வெட்டி சாய்த்து சென்றுள்ளனர். இதனால், நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக காலை, மாலை இரவு என பல்வேறு நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்த வந்த மரங்கள் திடீரென வெட்டப்பட்டது எங்களின் குடும்பம் முழுவதும் மிகுந்த சிரமத்தை ஆழ்த்தியுள்ளது.
எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் இதை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது, நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளோம். தென்னை மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் தமிழக அரசு எங்கள் குடும்பத்தினருக்கு மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது:- பட்டுப்போன மரங்களை வெட்டுவதற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில், பச்சை மரங்களை வெட்டியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.