உசிலம்பட்டி அருகே ,கோயிலில் கொள்ளை: சிசிடிவி வெளியீடு..!
உசிலம்பட்டி அருகே கோயிலில் கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.;
மதுரை :
உசிலம்பட்டி அருகே, கோயில் லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பாறை முனியாண்டி கோயில்.பாப்பிநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் காவல் தெய்வமாக இந்த பாறை முனியாண்டி சாமி இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று காலை இந்த கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கோயில் பூசாரியான பிரபு வந்து பார்த்த போது, கோயிலின் லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் துண்டால் முகத்தை மறைத்துக் கொண்டு கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். .5க்கும் மேற்பட்ட கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்கும் கோயிலின் லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.