அரசு ஊழியர்கள் புதன்கிழமை தோறும் சொந்த வாகனங்களில் வர வேண்டாம்: மதுரை கலெக்டர் வேண்டுகோள்
அரசு ஊழியர்கள் புதன்கிழமை தோறும் சொந்த வாகனங்களில் வர வேண்டாம் என்று மதுரை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காற்று மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் முதல் முயற்சியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் பயண நாள் (புதன் கிழமை) என கடைபிடித்து தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டு அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள், மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுலகத்திற்கு வருகிறார்கள்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமை அன்று தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் அல்லது மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வருமாறும், மேலும் தங்களது அலுவலகங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவரும் மேற்கூறியவற்றை கடைபிடிக்க தெரிவித்து கொள்கிறார். இது ஒரு சிறுபடியென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் துவக்கமாகும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.