மதுரையில் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கல்
இது வெறும் பரிவர்த்தனை அட்டை அல்ல உங்களுடைய வாழ்க்கை யை மாற்றப்போகின்ற துருப்புச் சீட்டு என்றார் உதயநிதி;
மதுரை மாவட்டம், துவாரகா பேலஸ் மஹாலில் நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி அட்டைகளை வழங்கி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதியன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்கள்.
இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முதலாக 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறுகின்ற வகையில், இத்திட்டத்தை , தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் 500-க்கு மேற்பட்ட பயனாளி களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான பரிவர்த்தனை அட்டைகளை வழங்க இருக்கின்றோம். இது வெறும் பரிவர்த்தனை அட்டை அல்ல உங்களுடைய வாழ்க்கை யை மாற்றப்போகின்ற துருப்புச் சீட்டு. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவு களுக்கெல்லாம் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருக் கிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
கலாசார ரீதியாக, சட்ட ரீதியாக, பொருளாதார ரீதியாக என 3 வழிகளில் பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு வந்தது என தந்தை பெரியார் தெரிவித்தார். பணக்காரர் – ஏழை என்ற அந்த அடிமைத்தனத்தை விட, மேல்சாதி – கீழ்சாதி என்ற அந்த அடிமைத்தனத்தை விட. முதலாளி – தொழிலாளி என்ற அந்த அடிமைத்தனத்தைவிட மிகமிக மோசமானது இந்த ஆண் – பெண் அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை விட கொடுமையானது விதவை என்று கூறி அவர்களுக்கு நாம் இளைக்கின்ற கொடுமை மிகமிக கொடுமை என்று தந்தை பெரியார் வரையறை செய்துள்ளார்.
அதோடுமட்டுமல்ல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது பெண்களுக்கு கல்வியறிவு, தேவையில்லை குடும்பதைப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் பெண்களின் வேலை என்று நெடுங்காலமாக நமது சமுதாயம் இருந்து வந்தது. இவை அனைத்தையும் எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த இயக்கம்தான் நமது திராவிட இயக்கம்.
பேரறிஞர் அண்ணா செயல்படுத்திய சுயமரியாதை திருமணச் சட்டம் பெண்கள் முன்னேற்றத் தில் சிகரமாக விளங்கி வருகிறது. ஒருதாய் வயிற்றில் பிறந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்துரிமை, பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் உரிமை, கிடையாது என்ற நிலைமை தான் இருந்து வந்தது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
ஒரு பெண் தனது இளமை காலத்தில் தந்தையையும் வளர்ந்து திருமணம் முடிந்தவுடன் கணவனையும் வயது முதிர்ந்த காலத்தில் தங்களுடைய பிள்ளைகளையும் எதிர்பார்த்து வாழ்கின்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்த நிலைமை மாறி பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் அவர்களும் ஆண்களைப்போல தாங்கள் விரும்பும் கல்வியை கற்க வேண்டும். தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும் உரிய வேலையில் அமர வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ. 1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் பயணம் செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் செயல்படுத்திய முதல் திட்டம்தான் பெண்களுக்கான கட்டணமில்லா இலவசப் பேருந்து பயணத் திட்டம். அதேபோல , 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்” மூலம் 17 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை நமது கழக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கெல்லாம் முதன்மையான திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 என்பது உதவித்தொகை அல்ல
இது மகளிரின் உரிமைத்தொகை என, தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களின் உழைப்பிற்கு ஒரு அண்ணனாக இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள். உங்களுடைய சகோதரனாக,மகனாக இருந்து இதைப்பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இது உங்களுடைய உழைப்பிற்கான உரிமைத்தொகை. எனவேதான்
இந்த திட்டத்திற்கு கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்கள்.
மகளிர் அனைவரும் முற்போக்கு சிந்தையாளராகவும், சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் முன்னேற முடியும். ஆண்களை விட பெண்கள்தான் தனது வருமானத்தின் பெரும்பகுதியை குடும்ப பராமரிப்பிற்காக செலவிடுவார்கள். அதே போல, வருமானத்தின் பெரும்பகுதியை சேமித்து வைப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்குவர்.
எனவே, பொருதாரத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைவது நமது வீட்டிற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் , ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஒவ்வொருவரின் வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இவ்விழாவின் போது, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி , சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், துணை மேயர் தி.நாகராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.