சோழவந்தான் கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை நடக்குமா?
சோழவந்தான் கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் இதனால், நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், நாளை 26 .9 .24 அன்று சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என,நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களில், பதிவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சோழவந்தான் வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி திருநாள் வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென, கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஆக்கிரமிப்பு எடுக்கும் நடவடிக்கை முழுக்க முழுக்க நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், எங்களால் இது குறித்து எதுவும் செய்ய முடியாது என ,பேரூராட்சி நிர்வாகம் கூறி விட்டது. இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென மனு கொடுத்து விட்டு வந்தனர் .
இந்த நிலையில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், ஆக்கிரமிப்புகளை பொது மக்கள் தாங்களாகவே அகற்றி வருகின்றனர். குறிப்பாக, மாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி, மார்க்கெட் ரோடு, வட்ட பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தங்களின் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாக எடுக்கும் நடவடிக்கைகளில், நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை அரசு அறிவித்திருந்தாலும், பொதுமக்களும் தாங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வருவது பாராட்டுக்குரியது என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டபடி செப்டம்பர் 26 -இல் சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுப்பார்களா அல்லது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்புகளை எடுக்கும் முடிவை தள்ளி வைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.