திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை கேட்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன் குளம் பஞ்சாயத்தில், உள்ள பெரிய மறவன்குளம் சின்ன மறவன் குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு 100 நாள் வேலையை பகிர்ந்து வழங்க வேண்டும் என, கிராம மக்கள், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தின் போதும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ஊராட்சி எழுத்தர் விஜயன், தனக்கு சாதகமாக உள்ள சின்னமறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் போதிய அளவிற்கு 100 நாள் வேலையை ஒதுக்கி தருவதாகவும், பெரிய மறவன்குளத்தை சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு பத்து நாள் மட்டுமே வேலை அளித்து வருவதாக குற்றம் சாட்டி ஊராட்சி எழுத்தரை இடமாற்றம் செய்யக் கோரியும், தங்கள் கிராமத்திற்கு 100 நாள் வேலையை நிரந்தரமாக அளிக்க கோரியும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு நிரந்தரமாக 100 நாள் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்கள் நடத்திய இந்த போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.