மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்
அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பெற்று பயனடைய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா;
பேய்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 250 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பேசியதாவது:தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், அரசுத்துறை அலுவலர்கள் கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
கள்ளிக்குடி வட்டம், பேய்குளம் கிராமத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் 250 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 1 இலட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஊரகப் பகுதிகளை தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்க வேண்டும் என்றால், அக்கிராமத்தில் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும்.
அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை பெறுவதற்காக மனுக்கள் பெறப்பட்டு விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கள்ளிக்குடி வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல , தொழிலாளர் துறையின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம்இ தாட்கோ திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியம் போன்ற வாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தகுதியான நபர்கள் இந்த நலவாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பெற்று பயனடைய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சாந்தி , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.