மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்;
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
வண்டியூர் சி எஸ் ஆர் தெருவை சேர்ந்தவர் பால்சாமி மகன் விஜய் 20. இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித் குமார் 26 என்ற வாலிபர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ100ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் அஜித்குமாரை கைது செய்தனர்.
நரிமேட்டில் முதியவரிடம்வழிப்பறி இரண்டு பேர் கைது
சிவகங்கை, திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன்(60.) இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோஸ்டேண்ட் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ 600 ஐ வழிப்பறி செய்துவிட்டனர் .இந்த சம்பவம் குறித்து ஞானசேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் ஞானசேகரனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பி பி குளம் நேதாஜி ரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின்( 29,), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன்( 23 )இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மதுரை திடீர் நகர் இரண்டாம் பிளாக்கை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி ( 43.) இவர் திடீர் நகர் எம்ஜிஆர் மன்றம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே மூன்று வாலிபர்கள் சரவணன் என்பவரை ஆபாசமாக பேசி தாக்கினர். இதை தமிழ்ச்செல்வி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தமிழ் செல்வியை ஆபாசமாக பேசி அவர் கடையின் கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழ் செல்வி திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலவாசல் பாண்டி மகன் சபரி மணிகண்டன் என்ற மண்ட மணி(31,), திடீர் நகர் அலாவுதீன் தோப்பு அப்துல்லா மகன் முஹம்மது நிஷான் அலி(22) ,ஜெய்ஹிந்த்புரம் நேரு தெரு செல்லப்பா மகன் மீனாட்சி சுந்தரம் என்ற பைப் சுந்தரம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கு விசாரணை கைதி திடீர் என்று உயிர் இழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்தவர் முனியன் மகன் முருகன்(44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இந்த நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை டிவிஎஸ் நகர் கோவலன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி 50. அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் அஜித் குமார்(22.). இவருக்கும் முத்துலட்சுமியின் மகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அஜித் குமார் பெரிய வாளொன்றை எடுத்து காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து முத்துலட்சுமி சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் அஜித்குமாரை கைது செய்தனர்.
மதுரை சிலையனேரி சிலையனேரி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி(46.). சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக உள்ளே சென்ற மர்ம ஆசாமி வீட்டில் வைத்திருந்த எட்டரை பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து புகழேந்தி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டை உடைத்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலைய முன்பாக திலகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் .அவர் சந்தேகப்படும் படியாக கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார்.அந்த ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா 36, தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான்(22 )என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் 2590ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.