திருமங்கலம் மாவட்ட ஊராட்சி தேர்தல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பிரசாரம்
திமுக அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்
மக்களின் மீது அக்கறை அற்ற அரசாக திமுக அரசு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரசாரம் செய்தார்.
மதுரை மாவட்ட 16-வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தமிழழகனை ஆதரித்து, கண்டுகுளம், போல்நாயக்கன்பட்டி, புல்லமுத்தூர், சாத்தங்குடி ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பிரச்சாரம் செய்து பேசியதாவது:
இந்த தொகுதியில், நீங்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர் .இதில், 202 வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறுகிறார். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கினரா, கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் தந்தாரா இல்லை. டீசல் விலையை குறைத்தார்களா இப்படி எந்த திட்டமும் செய்யவில்லை. 2011 திமுக ஆட்சி காலத்தில் 12 லட்சம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை 1000 ரூபயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார் .
அதனைத் தொடர்ந்து , தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார் .இதன் மூலம் 35 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக. 4,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில், முதியோர் ஓய்வு தொகையை 1,500 ரூபாயாக வழங்கப்படும் என்று கூறினார்கள். சொன்னபடி வழங்கினார்களா ,இப்படி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பெண்களுக்கு, மானிய விலையில் இரண்டு சக்கர வாகன திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அதேபோல், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மாதந்தோறும் 20 கிலோ அரிசித் திட்டம், மடிக்கணினி திட்டம், சைக்கிள் திட்டம் இப்படி திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. மக்களின் மீது அக்கறை அற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இப்படிப்பட்ட அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அது மட்டுமல்லாது, உங்களுக்கு வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாங்கள் போராடி பெற்றுத் தருவோம் என்று பேசினார்.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், பெரியபுள்ளான் என்ற செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டியன் மற்றும் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.