ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை: ஆர்பி உதயகுமார் பேட்டி
ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை மக்களின் கவலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் பணிகளை தான் அரசியல் உள்நோக்கம் இன்றி மேற்கொண்டு வருகிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்;
திருமங்கலம் தொகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீரை முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவிந்திரநாத்குமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுடன் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
பேரிடர் காலங்களில் மக்கள் கோரிக்கைகளை, தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது எதிர்க்கட்சிகளின் பிரதான கடமை, பொறுப்பு என்பதை உணர்ந்துதான் மதுரை மாவட்ட நிர்வாக கவனத்திற்கு மதுரை மாவட்ட நிலைமைகளை கோரிக்கைகளாக மனுக்களாக கொடுத்து வருகிறோம். இது எங்களுக்காக அல்ல மதுரை மக்களின் நலனை தவிர எள் முனை அளவும் உள்நோக்கம் இல்லை.
நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து கோரிக்கைகளும் கடுகளவு உள் நோக்கம் கிடையாது மக்கள் நலனை முன்வைத்து மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு ஒவ்வொரு நாளும் கொண்டுசெல்லப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அதன் பலனை மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்ல கடமையாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்கள் அதை உணர்ந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறோம்.
இதைத் தவிர அரசு மேற்கொள்ளும் பயனுள்ள திட்டங்களை வரவேற்க தயங்கியது கிடையாது அதேபோல் மறைத்ததும் இல்லை, மறக்கவும் இல்லை . அதேநேரத்தில் மக்களின் கோரிக்கைகளை நாங்கள் குறையாகவும், குற்றச்சாட்டாகவும் முன்வைக்கவில்லை. அதை நாங்கள் வேண்டுகோளாகவும் கோரிக்கையாகவும் முன்வைத்து எங்களது அடிப்படை ஜனநாயக கடமையை நான் தெரிவித்து வருகிறேன்.
ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்கவில்லை ஆனால்மக்களின் கவலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் பணிகளை தான் அரசியல் உள்நோக்கம் இன்றி மேற்கொண்டு வருகிறோம்.
மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும், பொதுப் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும், மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் ,மக்கள் தொண்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நான் சொன்ன கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இலக்கணத்தின் அடிப்படையில் எங்கள் பணி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் இந்தப் பணி மூலம் யாரையும் காயப்படுத்துவதோ, யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
தற்போது மதுரை மாவட்ட உள்ளிட்ட 6 மாவட்டங்கள் நோய் தொற்றினால் கவலை அளிப்பதாக ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே மதுரை மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை மாவட்ட நிர்வாகம் அதிகப்படுத்த வேண்டும்.
நோய்த் தொற்றை கிராமப்புறம் முழுவதும் கண்டறியும் பரிசோதனையை கணக்கெடுப்பு பணி இல்லாமல் பரிசோதனை உபகரணங்களோடு கிராமப்புறங்களில் முழுமையான பணியினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன் .
நோய் பரவல் உள்ள கிராம பகுதியில் தொற்றார்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க உரிய வழிகாட்டு நெறிமுறையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி மேற்கொள்ளும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொரோனா தடுப்பு முகாம்களில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆயிரக்கான மக்கள் குவிந்துள்ளனர் தடுப்பூசி செலுத்தும் பணியில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியவில்லை அதேபோல் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இதனால் ஏராளமானோர் குவிந்ததால் சமூக இடைவெளி இல்லாமல் பல இடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது மதுரையில் நகர்ப்புறங்களில் உள்ள புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இது போன்று நடைபெற்று உள்ளது.
மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரி வாளகம் போன்ற விரிவான இடவசதி உள்ள மையங்களில் தடுப்பூசி முகாமை ஏற்படுத்திட வேண்டும் இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க அதிகாரிகள் எளிமையாக கையாள முடியும் . தற்போது 18 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போட உரிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்து அதை முறையாக அறிவிக்கும் பட்சத்தில் மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
அதே போல் கொரோனா சிகிச்சை மையம் மக்கள் ஒத்துழைப்போடு அமைக்கும் பட்சத்தில் தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.