மதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம்

மதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-01-03 09:47 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைந்து நடத்தவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், ஆணையினை ஏற்று இதுவரை தமிழகத்தில் 69 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம் 1 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்திருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமை, மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக இன்றைய தினம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு அலுவலவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இம் முகாமில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இம்முகாம் மூலம் அதிகளவிலான இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்ற நம்பிக்கையோடு இம்முகாமினை நடத்த உள்ளோம்.

இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பை பெற்ற இளைஞர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 15 ஆயிரத்திற்கும் அதிமாக இருக்க வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்ப்பட்டுள்ளது.

மேலும், இம்முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்களா என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்ற சொல்லே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றி வருகிறார்கள். வடமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழிலாளர்களில் தமிழக தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்கள் என எந்த வேற்றுமையும் கருதவில்லை என, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அவர்களது தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமை சிறப்பாக நடத்திடும் வகையில் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அர்ப்பணிப்போடு மேற்கொள்ள வேண்டும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலநெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மரு.கா.சண்முகசுந்தர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News