ஆட்டோ டிரைவர் மற்றும் தள்ளு வண்டி வியாபாரியிடம் வழிப்பறி: 2 பேர் கைது
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்
தெற்கு வாசல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தெற்கு வாசல் கிருதுமால் நதி அருகே சென்ற போது பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது. கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், திருநகர் ஜோசப் நகர் மூன்றாவது தெரு நாகராஜ், பன்னியான் கிழக்கு தெரு சுரேஷ் மகன் அஜய்( 21,). சமயநல்லூர் ஊமச்சிகுளம் வீரய்யா கோவில் தெரு, சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர்( 20 ),விக்கிரமங்கலம் பெரியார் நகர் முத்தையா மகன் விஜய்( 20 ),வில்லாபுரம் மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சரவணன் என்ற கோலார் சரவணன்( 21 ) என்றும் தப்பி ஓடியவர் அவனியாபுரத்தை சேர்ந்த தினேஷ் என்றும் தெரிய வந்தது .இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து தப்பிஓடிய தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்- தள்ளு வண்டி வியாபாரியிடம் வழிப்பறி உள்பட பல்வேறு சம்பவங்களில் 5 பேர் கைது:
மதுரை ஆரப்பாளையம் மேல பொன்னகரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சாத்தப்பன் மகன் ஐயப்பன்( 26.) இவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.இவர் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு காபி கடை முன்பாக நின்றுகொண்டிருந்தார். அவரை இரண்டு பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ700ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஐயப்பன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவை சேர்ந்த முத்துமாரி மகன் கோபிநாதன் 22, அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சூரிய பாபு( 22 )இருவரையும் கைது செய்தனர் .
தள்ளுவண்டி வியாபாரியிடம் வழிப்பறி:
தர்மபுரி மாவட்டம் ஆரல்குத்தி என்ற ஊரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குழந்தைசாமி( 29 ).இவர் தள்ளு வண்டியில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.இவர் திருப்பரங்குன்றம் மெயின் ரோடு முத்துப்பட்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவரை மூன்று பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூ 1500ஐ வழிப்பறி செய்து விட்டனர் .இந்த சம்பவம் குறித்து குழந்தைசாமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அவனியாபுரம் பத்மா தியேட்டர் காலனி முனியசாமி மகன் அழகுமணி( 20,). அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகவேல் மகன் சரவணன் என்ற வண்டு சரவணன்( 22 ) ,அவனியாபுரம் எம் எம் சி காலனி மருது பாண்டியன் மகன் செந்தில்குமார்( 23 )ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
முல்லை நகரில் ஆண் பிணம் மீட்பு: போலீஸ் விசாரணை:
மதுரை முல்லை நகர் ராஜீவ் காந்தி நகர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன்( 57 ).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக இவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசில் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு கணேசன் பிணமாகக் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி புஷ்பவல்லி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.