மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜூலை 15-ல் அறிக்கை தாக்கல்

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி உள்ள பழமையான கட்டிடங்கள் சேதம் அடையாத வகையில் ரயில் நிறுத்தம்அமைக்க திட்டமிட்டுள்ளோம்;

Update: 2023-06-28 08:45 GMT

திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழு திருமங்கலம், தோப்பூர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ல் தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்து திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழு திருமங்கலம், தோப்பூர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம்  திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90 சதவித பணிகள் முடிவுற்ற நிலையில் திட்ட அறிக்கையின் இறுதிக் கட்ட குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பழமையான கட்டிடங்கள் சேதம் அடையாத வகையிலும் ரயில் நிறுத்தத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரையும் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் சற்று தாமதமாகும். வைகையாற்று பகுதிகளில் பாறை பகுதிகளில் மெட்ரோ பாதை அமைப்பதால் எந்தவித அச்சமும் இன்றி மெட்ரோ ரயில் பாதையில் இயக்கப்படும். ஜூலை 15 அன்று விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்" என்றார்.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட. அறிவிப்பில்,  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.  மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது மதுரையில் உள்ள திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மொத்தம் 31 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்படவுள்ளது. மேலும், தற்போது இந்த ரூட்டில் உள்ள இடங்களில் சர்வே, குடிநீர் குழாய், நெடுஞ்சாலை இடங்கள், பூமிக்கு கீழே செல்லும் மின் வயர்கள் குறித்து அந்தந்த அதிகாரிகள் ஆய்வு செய்து  அதை மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனைக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள திட்டத்தின்படி மதுரை திருமங்கலத்திலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார், மீனாட்சியம்மன் கோவில், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பழங்காநத்தம், வசந்தநகர் பகுதியிலிருந்து கோரிப்பாளையம் வரை பூமிக்குக் கீழே மெட்ரோ ரயில் பாதை செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வைகை ஆற்றிற்குக் கீழே மெட்ரோ ரயில் பாதையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 31 கி.மீ தூரத்தில் 5 கி.மீ தூரம் மட்டும் பூமிக்கு அடியில் செல்லும்படி உருவாக்கப்படவுள்ளது. மீதம் உள்ள 26கி.மீ பூமிக்கு மேல் செல்கிறது. இதில் மொத்தம் 18 ஸ்டேஷன்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




Tags:    

Similar News