மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் வேகமில்லை: அதிமுக புகார்

ஏற்கெனவே சென்னை பாடம் அளித்தும் இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டார் என ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டினார்

Update: 2023-12-21 10:00 GMT

நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மதுரையில் வாகனங்கள் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எடுத்துச் சென்றார்.

தற்போது தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை பாடம் அளித்தும் கூட  இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார். இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்  குற்றம்சாட்டினார்.

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும், அதனைத் தொடர்ந்து தூத்துகுடியில் மழை நீர் வடியும் வரை கழகத்தின் சார்பில் அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மதுரையில் வாகனங்கள் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எடுத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.மகேந்திரன், கே. தமிழரசன், கே.மாணிக்கம், எம்.வி.கருப்பையா , மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன்,  மாவட்ட கழக நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி, வக்கீல் தமிழ்ச்செல்வன், உஷா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, ராமையா, கண்ணன், ரவிச்சந்திரன், அரியூர் ராதாகிருஷ்ணன்,கொரியர் கணேசன், காளிதாஸ், செல்லம்பட்டி ரகு, பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செயலாளர் ரகு,டாக்டர் உசிலை விஜயபாண்டியன், ராஜாங்கம், அம்மா சேரிடபுள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையில் ,இந்த ஆண்டு மிகப் பெரிய சோதனையை தமிழகம் எதிர்கொண்டது. திமுக அரசு ஏற்கெனவே பெய்த மிக்ஜாம் புயலை சரியாக கையாளவில்லை, தற்போது வரை சென்னை தத்தளித்து தான் வருகிறது. தற்போது, தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை பாடம் அளித்தும் இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார். இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எடப்பாடியார், தென் மாவட்டங்களில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து, திமுக அரசு பணிகளை முழு வீச்சில் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தொடர்ந்து கழக தொண்டர்கள் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். குறிப்பாக உணவு மக்களுக்கு கிடைக்கவில்லை உணவுகளை தொடர்ந்து வழங்கிட எங்களுக்கு உத்தரவிட்டார்.

 இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடியில், அம்மா கிச்சன் மூலம் மழைவெள்ள நீர் வடியும் வரை மக்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. இதற்கான மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் படகுகள் மூலம் உணவை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணியில், வெள்ளம் சூழ்ந்துள்ளது கரையோர கிராம மக்கள் மிகவும் பாதிப்புக்கு அடைந்துள்ளனர். இதுவரை மீட்பு பணியில் ஈடுபடவில்லை. இன்றைக்கு அமைச்சர்கள் கூட செல்ல தயக்கமாக உள்ளனர்.

 அரசு இயந்திரம் முழுமையாக முடங்கி உள்ளது. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பெருங்குளத்தில் மிகப்பெரிய சேதமடைந்துள்ளது. அந்த பகுதியில் நாங்கள் நேரடியாக சென்று பார்த்தோம்.மேலும், ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. அப்படி தூக்கி வீசும் பொழுது உணவு பாக்கெட்டுகள் உடைந்து சேதம் அடைகிறது.  அதனால் ,டிராக்டர் மூலம்,படகுமூலம் உணவுகளை வழங்க வேண்டும்.

 பல இடங்களில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் போராடி வருகிறார்கள். குறிப்பாக, உயிர் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுவரை தூத்துக்குடியில் 20 பேர் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ,அரசு மருத்துவமனையிலும், நீதிமன்றங்களும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அம்மா உணவகத்தை கூடமூடி விட்டார்கள் .இது போன்ற காலங்களில் ,காமன் கிச்சன் மூலம் மக்களுக்கு நாங்கள் உணவுகளை வழங்கினோம்.

 மேலும், தூத்துக்குடியில் ஆமை வேகத்தில்பணிகள் நடைபெறுகிறது. மீட்பு பணியில் ஒருங்கிணைந்த குழுக்கள் இல்லை. இதனால், தோல்வி ஏற்பட்டதால் அரசின் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள். அமைச்சர்கள் ஏ.வ வேலு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர் உள்ளே போக முடியவில்லை. அவர்களுக்கே சவாலாக உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை கூட மூன்று நாள் கழித்து தான் மீட்டுள்ளார்கள்.

எடப்பாடியார் ஆய்வு செய்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 வழங்கப்பட வேண்டும் என, கூறினார். இதே கடந்த காலங்களில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் துறையின் மூலம் 4 லட்சமும், முதலமைச்சரின் நிவாரண நிதியில் மூலம் 6 லட்சம் என 10 லட்சம்  ரூபாயை எடப்பாடியார் வழங்கி உள்ளார்.

தற்போது, தூத்துக்குடி மாநகரில் 60 வார்டுகள் உள்ளது அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 480 வருவாய் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் எல்லாம் மழை சூழ்ந்துள்ளது.இந்தியாவிலேயே குஜராத் அடுத்து இரண்டாவது இடத்தில் உப்பு ஏற்றுமதியில் தூத்துக்குடி உள்ளது ஏறத்தாழ 25000 ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வருகிறது இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் வானிலை ஆய்வு மையத்தை குற்றம் சாட்டுகிறார். 2022 ,2023 பட்ஜெட்டில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.தியாகராஜன் வானிலை ஆய்வு மையத்தை துல்லியமாக கணக்கெடுக்க சூப்பர் கம்ப்யூட்டர் என்ற திட்டத்தை செயல்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுது என்று கூறினார்.இதுவரை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.இது குறித்து ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளிவந்துள்ளது.

 ஏற்கெனவே, சென்னை மாநகராட்சியில் மழை வடிகால் பணிக்கு  4000 கோடியை செலவு செய்தோம் என்று முதலமைச்சர் கூறினார் .அதனைத் தொடர்ந்து, 5,120 கோடியை செலவு செய்தோம் என அமைச்சர் நேரு கூறுகிறார். தற்போது, மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையத்தை முதலமைச்சர் முதல் அமைச்சர் வரை ஏற்கெனவே குற்றம் சாட்டினர் . ஆனால், வானிலை ஆய்வு மையத்தை துல்லியமாக கணிக்க 10 கோடியில் சூப்பர் கம்ப்யூட்டர் ஒதுக்கப்பட்டது என அமைச்சர் கூறுகிறார்.ஏன் இந்த வேறுபாடு என மக்கள் கேட்கிறார்கள்.

மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள் சோமலிய நாட்டில் கூட இந்த நிலைமை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நேச கரம் நீட்டாமல், தனது கூட்டணி பறிபோகி விடுமோ என்ற அச்சத்தில் டெல்லி சென்றார்.மக்களின் அச்சத்தை போக்காமல் தனது கூட்டணி உரிமை பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் டெல்லி சென்றுள்ளார் என மக்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கெனவே, கொரோனா காலங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அடுப்பு மருந்து இருக்கும் என அம்மா கிச்சன் உணவு வழங்கப்பட்டது. அதேபோல், தற்போது வெள்ளமழை நீர் வடியும் வரை அம்மா கிச்சன்  மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படும் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Tags:    

Similar News