மதுரை அருகே அங்கன்வாடி மையத்தை அகற்ற எதிர்ப்பு
அப்பகுதியில் உள்ள தனிநபர் புதிய அங்கன்வாடி மையம் கட்டிய இடம் நீரோடை பகுதி எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.;
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில், உள்ள எம்ஜிஆர் காலனியில் ரூபாய் 12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு, குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள தனிநபர் புதிய அங்கன்வாடி மையம் கட்டிய இடம் நீரோடை பகுதி எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நீரோடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய புதிய அங்கன்வாடி மையத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மக்கள் , அங்கன்வாடி மையத்தின் முன்பு கை குழந்தைகளுடன் அமர்ந்து, தங்களது குழந்தைகள் பயன்பெறக்கூடிய இம்மையம் நீரோடை பகுதியில் அமைக்கப்பட்டது அல்ல ,தனிநபர் சுயநலம் கருதி அதனை அகற்ற நீதிமன்றத்திற்கு வழக்கு கொடுத்துள்ளார் .
நீதிமன்றம் ஆய்வு குழு அமைத்து, மறுபரிசீலனை செய்து, புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை நிரந்தரமாக அதே இடத்தில் அமைத்து பிஞ்சு குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கின்ற கட்டிடமாகவும் அமைய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் இலங்கை தமிழ் மக்கள் (புலம்பெயர்ந்த தமிழர்கள்)குடும்பங்களை சார்ந்த குழந்தைகள் பெரும்பாலானோர் இம்மைய கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.