மதுரையில் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
மதுரையில் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருந்துவரும் நிலையில் வருகின்ற 23ந் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடும் என்று தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமைச் கழகத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமையை உருவாக்க வேண்டும் என்ற பேச்சு மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே தற்போது பேசி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தென்மாவட்டங்களில் தேனி, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஓபிஎஸ் ஏற்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மதுரை நகர் முழுவதும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஆர் பி உதயகுமார் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்ட துவங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும், மதுரையை பொறுத்தவரை தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை தீர்மானிக்கக் கூடிய இடமாக மதுரை இருந்து வரும் நிலையில், மதுரையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக நகர் முழுவதும் ஆர் பி உதயகுமார் மாவட்ட செயலாளராக பொறுப்பு உள்ள மேற்கு மாவட்ட பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற பகுதிகளிலும் இந்த போஸ்டர் ஒட்டி இருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.