மதுரையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: நிதி அமைச்சர் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் 2,66,230 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது;
அரசு இராசாஜி மருத்துவமனையில் போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாமினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி துவக்கி வைத்தார்:
மதுரை மாவட்டம், அரசு இராசாஜி மருத்துவமனையில் போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
பிறந்தது முதல் ஐந்து (5) வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2,66,230 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிறந்நது முதல் ஐந்து (5) வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், நரிக்குறவர், இலங்கை அகதிகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்புகவனம் செலுத்தி சொட்டுமருந்து வழங்கப்படும்.
இந்த சொட்டுமருந்து மையங்கள் அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டுமருந்து வழங்கும் மையங்களில் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை சொட்டுமருந்து வழங்கப்படும். இதைத் தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் மையங்கள் அமைத்து சொட்டுமருந்து வழங்கப்படும். இந்த சொட்டுமருந்து பணியைக் கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சொட்டுமருந்து செலுத்தும் பணியினை கண்காணிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13 மேற்பார்வை யாளர்களும், சுகாதாரத்துறை மூலமாக 11 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சொட்டுமருந்து செலுத்தும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மூலமாக 1,083 பணியாளர்களும், சத்துணவுத்துறை மூலமாக 2,638 பணியாளர்களும், வருவாய்த்துறை மூலமாக 13 பணியாளர்களும், கல்வித்துறை மூலமாக 84 பணியாளர் களும் மற்றும் 809 பள்ளி மாணவர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக 2,785 பணியாளர்கள் என மொத்தம் 7,636 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரசு இராசாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரம்)செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.