மகளிர் உரிமைத்திட்டத்தில் இரண்டாம் கட்டமாக பதிவேற்றும் பணி தொடக்கம்: ஆட்சியர்
5.8.2023 முதல் விண்ணப் பங்களை பதிவு செய்யும் பணி 773 நியாய விலைக்கடை வாரியாக அமைந்துள்ள 1440 முகாம்களில் நடைபெற உள்ளது;
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 1440 சிறப்பு முகாம்களில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவிப்பிற்கிணங்க கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மதுரை வடக்கு மேலூர், திருப்பரங்குன்றம் , பேரையூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய ஐந்து வருவாய் வட்டங்களில் 05.08.2023 முதல் விண்ணப் பங்களை பதிவு செய்யும் பணி 773 நியாய விலைக்கடை வாரியாக அமைக்கப்பட்டுள்ள 1440 முகாம்களில் நடைபெற உள்ளது.
இதற்காக ஆகஸ்ட் 1 முதல் மேற்கண்ட ஐந்து வட்டங்களில், விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அந்தந்த நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 0452 2532501, வட்டாட்சியர் அலுவலகங்கள், மதுரை வடக்கு வட்டம் - 0452-2532858,மேலூர் வட்டம் - 0452 2415222, திருப்பரங்குன்றம் வட்டம் - 0452 2482311, பேரையூர் வட்டம் - 04549 293677,உசிலம்பட்டி வட்டம் – 04552 252192 ஆகிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா தெரிவித்துள்ளார்.