சோழவந்தான் அருகே முறையான அறிவிப்பின்றி அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு அலைக்கழிக்காத வண்ணம் முகாமை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால், கச்சிராயிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அட்டை வாடிப்பட்டியில் வழங்குவதாக அதிகாரிகள் கொடுத்த அறிவிப்பை கண்டு தங்களது ஊர்களில் இருந்து ஆட்டோ களிலும் வாடகை வண்டிகளிலும் வாடிப்பட்டிக்கு வந்தனர்.
இந்நிலையில் தவறான தகவல் கொடுத்து விட்டதாகவும், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறுவதாகவும் அதற்குரிய அட்டைகள் வழங்கப்படுவதாகவும், அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில் மீண்டும் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே இங்கு பதிய முடியும் உங்களுக்கு மேலக்கால் ஊராட்சிக்கு சென்று பதிய வேண்டும் என்று மீண்டும் அதிகாரிகள் தவறான தகவல் கூறியதை அடுத்து மீண்டும் ஆட்டோ பிடித்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய அவலம் ஏற்பட்டது.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்த உறவினர்கள் கூறும்போது:வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளி களுக்கான முகாம் நடப்பதாகவும், அதனால் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை பெற்று செல்லுமாறு கூறிய நிலையில், 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்றோம்.பின்பு ,அங்கு எங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் கேட்டபோது முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், முகாம் நடப்பதாகவும் அங்கு செல்லுமாறும் கூறிய நிலையில் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு முள்ளிப்பள்ளம் சென்றனர்.
அந்த முகாமில் இருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே முகாம் நடைபெறுகிறது. உங்களுக்கு மேலக்கால் ஊராட்சியில் நடைபெறும். அப்போது, அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளோம். அதிகாரிகள் முறையாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆகையால் ,இனி வரும் காலங்களிலாவது, மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு உரிய முறையில் அறிவிப்பு வெளியிட்டு எங்களை அலைக்கழிக்காத வண்ணம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.