நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்
அதிமுக ஆட்சி காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது;
நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த இடைத்தரகர்கள் இடையூறும் இல்லாமல் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
தற்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால், விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சோழவந்தான் தொகுதியிலுள்ள தென்கரை, ஊத்துக்குளி, மட்டையான், மலைப்பட்டி, தென்கரை புதூர் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் நெல் விவசாயம் உள்ளது.
தற்போது, 1,000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டது. ஆனால், தென்கரையிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை 60 ரூபாய் கேட்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, 60 ரூபாய் கொடுத்தாலும் கூட விவசாயிகளிடம் நெல் ஈரப்பதமாக உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இடைத்தரகர்கள் மூலம் வியாபாரியிடம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் பெற்றுக் கொண்டு அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சோழவந்தானில் விவசாயிகள் நடுரோட்டில் நெல்லைக் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.ஆகவே, விவசாயிகளிடம் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து இடைத்தரகர் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த மாதம் சோழவந்தான் தொகுதியில் கருப்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளிடம நெல் கொள்முதல் செய்யாததால், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 28 11 2020 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை கிடைப்பதற்கு தாமதமாகியுள்ளது என்றும் ,கூட்டுறவு சங்கங்களே நெல்லுக்கான தொகையை நேரடியாக பட்டுவாடா செய்யவேண்டும் என்றும், கொள்முதல் செய்வதற்கு தேவையான உபகரணங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் நெல்லுக்கான தொகையை குறைத்து வழங்குவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்ப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.