மதுரையில் பலத்த மழையால் நெற் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது;

Update: 2022-11-04 11:30 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

மதுரையில் பலத்த மழையால் குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.

மதுரை நகரில் கடந்த இரு  நாள்களாக  பெய்து வரும்  பலத்த மழையால், சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், பரவை, விளாங்குடி,தேனூர், திருப்பாலை, ஊர்மெச்சிகுளம், காஞ்சனா பேட்டை, அழகர் கோவில், பாறைப்பட்டி, கருப்பாயூரணி ,பூவந்தி, வரிச்சூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய உள்ளடக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை நகரில் பல வார்டுகளில் தெருக்களில், மழை நீர் செல்ல வழி இல்லாமல், குளம் போல தேங்கியுள்ளன.

மதுரை நகரில் திருப்பாலை கிருஷ்ணன் கோவில் சாலையில்  அமைந்துள்ள ஆதிபராசக்தி நகர், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், கோமதிபுரம் ,ஜூபிலி டவுன் ஆகிய பகுதிகளை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று மழை நீரை உடனடியாக அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், சாலைகள் மழை நீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகனத்தை சொல்வோரும் பாதசாரிகளும் அவதி அடைந்துள்ளனர். மேலும், மதுரை புறநகர் பகுதிகளில், வயல்வெளிகளில் மழை நீர் புகுந்து நெல் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக  அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன. போக்குவரத்தும், துண்டித்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையே  காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் இணைப்பு சாலையில் ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. இதற்காக , பாலத்திற்கு அடியில் சென்ற கால்வாய்கள் இடிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு தினகளாக பெய்து வரும் கனமழை காரணமாக, சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.

மேலும், கால்வாய் இடிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வயல்களில் கடல் போல் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது.இதனால் ,அந்த பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், இது குறித்து விவசாயிகள் கூறும் போது:கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக அடுத்தடுத்து, ஊத்துக்குளி, நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் பால வேலைகள் தொடங்கும் போது மழைக்காலமாக இருப்பதாகவும் ஆகையால் , தற்போது இந்த வேலைகளை தொடங்க வேண்டாம் என்றும், மேற்கொண்டு தொடங்கினால் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கிராமத்தின் சார்பாக கேட்டுக் கொண்டோம்.

ஆனால்,   எதையும் கண்டு  கொள்ளாமல் வேலைகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால், தற்போது, பெய்த கன மழைக்கு வயல்களில் தண்ணீர் தேங்கி நடவு செய்த நெல் பயிர்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், இதற்கு பொறுப்பில்லாமல் சாலை பணிகளை செய்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், மதுரையிலிருந்து மேலக்கால் நாராயணபுரம் ஊத்துக்குளி வழியாக சோழவந்தான் செல்லும் அரசு பேருந்துகளின் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதால் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News