திமுக ஆட்சியில் கமிஷன் இல்லாமல் பணிகள் நடக்காது: பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க அமைச்சர் மூர்த்தி ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் என்று திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். எட்டாம் நாள் பாதயாத்திரையாக மதுரை அருகே சோழவந்தானுக்கு வருகை தந்தார். அவருக்கு, அங்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்று சால்வை அணிவித்தனர். சோழவந்தான் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், மதுரை அருகே அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பதற்கு அமைச்சர் மூர்த்தி ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன். திமுக ஆட்சியில் கமிஷன் இல்லாமல் எந்த திட்டப் பணியும் நடைபெறவில்லை. பாரதப் பிரதமர் மோடியை பொருத்தமட்டில்மக்கள் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களையே அவர் தீட்டி வருகிறார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
.இதையடுத்து சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட தெ.நாராயணபுரம் கிராமத்தில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கினார்.அங்கே கிராம மக்கள் சார்பாக வரவேற்பு நடந்தது. இங்கு உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களுடைய ஜல்லிக்கட்டு மாட்டுடன் அண்ணாமலையை வரவேற்றனர் .
இதைத் தொடர்ந்து, கிராமத்தில் 40 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் உணவகத்திற்கு நேரடியாக சென்று கடை உரிமையாளர் சுபா தேவி ரவியை பாராட்டினார். ஊத்துக்குளியில் ஒரு பெண் அவரை அழைத்து நடை பயணத்தை பாராட்டி வருங்காலத்தில் நீங்கள் தான் முதல்வராக வேண்டும். எங்களுடைய ஆதரவு உங்களுக்குத் தான் என்று தெரிவித்து இளநீர் குடித்துவிட்டு தொடர்ந்து,தென்கரை கிராமத்தில் ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்தினார்.
சோழவந்தானில் எம். வி. எம். மருது மஹால் அருகே பாஜக மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளிமயில் , சிவகாமி உள்பட பாஜக தொண்டர்கள் திரளாக அண்ணாமலையை வரவேற்றனர்.இங்கு உள்ள மகாலில் உள்ளே சென்று அங்கிருந்தவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வட்ட பிள்ளையார் கோவில் பஸ் நிலையம், கடை வீதி, மாரியம்மன் சந்நிதி தெரு, காமராஜர் சிலை வரை நடந்து சென்றார். வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர் .
இதனை தொடர்ந்து, சோழவந்தான் காமராஜர் சிலை முன்பாக நடை பயணத்தை நிறைவு செய்த அண்ணாமலை பொது மக்களிடம் பாஜக அரசின் சாதனைகள் திமுக அரசின் ஊழல்கள் பற்றி எடுத்துரைத்தார். இதில், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல், வாடிப்பட்டி கண்ணன், கேசவ பெருமாள், முத்துராமன், மூவேந்தர் ரங்கஜி அழகர்சாமி மற்றும் மேனகா, திருவேடகம், நாராயணபுரம் ஊத்துக்குளி, தென்கரை, சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி அலங்கா நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சமயல்நல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உள்பட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.