மதுரை அருகே நிறுத்தத்தில், நிற்காத அரசு பஸ்..!
சோழவந்தான் பகுதிகளில் நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.;
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தானிலிருந்து, திருமங்கலம் செல்லும் பேருந்துகள் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை பல இடங்களில் நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள் பேருந்தை நிறுத்துவதற்கு சைகை காண்பித்தாலும், ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தாமல், செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
நேற்று சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் தடம் 1283எண் கொண்ட பேருந்து திருவேடகம் பேருந்து நிலையத்தில், ஐந்துபெண்கள் இரண்டு ஆண்களுடன் பேருந்தை நிறுத்த சைகை காண்பித்த போது, நிற்காமல் சென்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் டூவீலரில் அவர்களை ஏற்றிக்கொண்டு மேலக்கால் வைகை புது பாலம் வரை சென்று பேருந்தை மறித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறும் போது: சோழவந்தானிலிருந்து, திருமங்கலத்திற்கு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் இடைவெளியில்தான் பேருந்து வருகிறது. அதுவும் ,பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் சைகை காண்பித்து நிறுத்தச் சொன்ன பிறகும் நிறுத்தாமல், செல்வதால் அடுத்த பேருந்துக்காக இரண்டு மூன்று மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
இதனால்,நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல், செல்லும் ஓட்டுநர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கையை போக்குவரத்து கழக மேலாளர்கள் எடுக்கவேண்டும். இல்லையென்றால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவேண்டியநிலை வரும் என்று கூறினார்.