மதுரை மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியர் தகவல்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு 2021-2022 பருவத்தில் ஒரே நேரத்தில், குறைந்தது 1000 நெல் மூட்டைகள் (தலா 40 கிலோ மூட்டை) அல்லது அதற்கு மேல் நெல் மூட்டைகளை, தனிப்பட்ட பெருவிவசாயி அல்லது சிறு, குறு விவசாயிகள் குழு, விற்பனை செய்ய முன்வரும் பட்சத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும்.
எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விபரத்தினை பின்வரும் முகவரியில் தெரிவித்து, தங்கள் பகுதிகளில் அறுவடையாகும் நெல்லினை நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்கங்கள் தரைத்தளம், டி.பி.கே ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரை- 3 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.