மதுரை மாவட்ட அளவிலான முகாமில் கல்வி கடன் வழங்கிய அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்ட அளவிலான முகாமில் அமைச்சர் மூர்த்தி கல்வி கடன்கள் வழங்கினார்.
மாவட்ட அளவிலான கல்விக்கடன் சிறப்பு முகாமில், 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-
ஒரு மனிதன் எத்தனை அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், எத்தனை செல்வம் படைத்தவராக இருந்தாலும் கல்வி கற்ற அறிஞருக்கு நேராக முடியாது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எளிய மக்களை கல்வி ஒன்று தான் உயர்த்தும். இதனை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக என்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி பயில வழிவகை செய்ய ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னணி வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்வி கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில், கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 கோடிக்கும் அதிகமாக கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் இந்த மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமில் 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கும் பணத்தை செலவாக கருத முடியாது. வங்கியாளர்கள் கல்விக் கடன் திட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும். தொடர்ந்து,பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தி கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிக அதிகளவில் குழந்தைகளுக்கு கல்விக் கடன் உதவி வழங்கிட வேண்டும். இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் துக்காராம் நாயக், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ர.த.சாலினி , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தெ.சங்கீதா, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் முனைவர்.பியுலா ஜெயஸ்ரீ உட்பட பல்வேறு முன்னணி வங்கிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.