அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
ஒத்தவீடு கிராமத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது.;
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி சக்திவிநாயகர், நொண்டிசுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 48 நாள் மண்டல பூஜை கோவில் வளாகப் பகுதியில் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாக சாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, கோவிலில் உள்ள ஸ்ரீ ஆதிசக்தி விநாயகர், நொண்டி சுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ஒத்தவீடு மூன்றுகரை பங்காளிகள் மற்றும் கிடாரிபட்டி பங்காளிகள் அழகாபுரி 40 வீட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.