பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்க மதுரை மண்டல தொ.மு.ச. முடிவு
பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்க மதுரை மண்டல தொ.மு.ச. முடிவு செய்துள்ளது.;
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை மண்டல தொ.மு.ச. பொதுச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜனவரி 9ம் தேதி முதல் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளை இரண்டு முறை அழைத்து பேசினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே தமிழகத்தை பொறுத்தவரை திட்டமிட்டபடி நாளை முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொ.மு.ச. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறியதாவது:-
மதுரை மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் ஒன்பதாம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனையில் தகவல் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மதுரை மன்டல தலைவர் கார்த்தி சுரேஷ் ,பொருளாளர் மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் அய்யனார், சோழவந்தான் போக்குவரத்து பணிமனை தொ.மு.ச. தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜோதி ராமன், துணைத் தலைவர் சேவியர், துணைச் செயலாளர் பாலமுருகன், மேலக்கால் ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.