மதுரை மாவட்ட திட்டக்குழுக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியில் மாவட்ட திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானது;

Update: 2023-06-28 16:15 GMT

மாவட்ட திட்டக்குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிகலா கலாநிதி தலைமையில், மாவட்ட திட்டக்குழுத் துணைத் தலைவர் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, முன்னிலையில் மாவட்ட திட்டக்குழுவின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிகலா கலாநிதி தலைமையில், மாவட்ட திட்டக்குழுத் துணைத் தலைவர் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, முன்னிலையில்  மாவட்ட திட்டக்குழுவின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று  பேசியதாவது:  மாவட்ட திட்டக்குழு என்பது மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒரு அலகாகும். ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியில் மாவட்ட திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானது. இக்குழுவின் தலைவராக மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுகின்றனர்.

இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் நலன் சார்ந்து மாவட்ட முழுமைக்கான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது இக்குழுவின் முக்கியக் கடமையாகும்.

அந்த வகையில், மதுரை மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கப் பூர்வமான திட்டங்களை தயார் செய்து சிறப்பாகப் பணியாற்றிட மாவட்ட திட்டக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான திட்டப் பணிகளை செயல்படுத்துவோம் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News