மதுரையில் சுதந்திர தின விழா : ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை..!
மதுரையில் நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார்.;
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேசியக் கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மதுரை:
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இன்று (15.08.2023) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.27098 மதிப்பிலும், வருவாய்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.144000 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10000 மதிப்பிலும்,
தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.127000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2௦௦௦ மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11800000 மதிப்பிலும், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.87548மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ,2 பயனாளிகளுக்கு ரூ.10351மதிப்பிலும்,மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.39004மதிப்பிலும்,மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4338500மதிப்பிலும் என, மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூபாய்.17423437 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், பொது சேவையில் சிறப்பாக செயலாற்றிய தன்னார்வலர்கள் என, மொத்தம் 227 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிமேடு ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விஸ்வநாதபுரம் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி (இல்லம் தேடிக்கல்வி), திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, லெட்சமிபுரம் டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 532 மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, 77-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, காந்தி மீயூசியத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர், மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.பாலசுப்பிரமணியன் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.