மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கல்

ரூ.104.04 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்;

Update: 2023-08-11 16:00 GMT

மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் 1496 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.97.03 கோடியும் , 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனாக ரூ.7.02 கோடியும் என, மொத்தம் ரூ.104.04 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை  தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.08.2023) முன்னாள் முதல்வர் கருணாநிதி யின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1496 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.97.03 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனாக ரூ.7.02 கோடியும் என, மொத்தம் ரூ.104.04 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

தொடர்ந்து , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  பேசியதாவது:

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் மொத்தம் 17784 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மகளிர் குழுக்களுக்கு தேவையான வங்கி கடன் இணைப்புகளை பெறுவதற்காக 2023-2024-ஆம் ஆண்டுக்கு ரூ.980.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. 01.04.2023 முதல் 03.08.2023 வரை 5668 குழுக்களுக்கு ரூ.308.83 கோடி வங்கி கடன் இணைப்பு பெறப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.104.04 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் ,13464 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கடன் உதவி பெற்று பயன் பெறுகின்றனர். கடன் இணைப்பு பெறப்பட்ட குழு உறுப்பினர்கள் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், சிற்றுண்டி கடை, உணவகம், பலசரக்கு கடைகள், மாவு, மசாலா பொருட்கள் உற்பத்தி, கைவினை பொருட்கள் உற்பத்தி, விவசாய தொழில்களான ஆடு, மாடு கோழி வளர்ப்பு, போன்ற தொழில்களை மேற்கொண்டு பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்தும் அளிக்கும் வகையில் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து பெண்களும் மகளிர் சுயஉதவிக் குழுவில் சேருவதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், பெண்கள் பிறரின் கையினை எதிர்பார்த்து வாழாமல் தாங்களே சுயமாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலமாகவும், கூட்டுறவுத்துறையின் மூலமாகவும் கடனுதவிகளை பெற்று சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

1989-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதி, பெண்கள் வாழ்க்கையில் முன்னேருவதற்கு வேலைவாய்ப்பு முக்கியத்துவம் என்பதை கருத்திற்கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் , 2006-ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பதவி வகித்த பொழுது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகளைப் பெற்றுத் தந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அரசின் மூலம் பெற்ற ரூபாய் 93 ஆயிரம் கோடி கடனுதவிகளை தள்ளுபடி செய்தார்கள். தமிழ்நாட்டில் இதுவரை, இல்லாத அளவிற்கு 06.02.2023-அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் , தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 72092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது, மாபெரும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

கிராமப்புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகளவில் சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு பெரிய இடத்தினை தேர்வு செய்து அப்பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டு கலத்தில் பெண்களின் நலனை கருத்திற்கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு தாங்கள் வேலைக்கு செல்ல முடியாது என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். பெண்கள் நலன் மீது அக்கறை கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

இன்று பல்வேறு கடனுதவிகள் பெற்ற பெண்கள் அனைவரும் நல்ல முறையில் தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News