சிவகாசியில் பர்னிச்சர் கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளை

சிவகாசியில் பர்னிச்சர் கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-08 06:37 GMT

கொள்ளை நடைபெற்ற சிவகாசி பர்னிச்சர் கடையில் விரல் ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

சிவகாசியில் பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இன்று காலையில், செய்யது அபுதாகிர் கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேஜையில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செல்போன்களும் திருட்டு போனதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சிவகாசி நகர் போலீசார் வந்தனர். இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் உடனடியாக  வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த விரல் ரேகைகளை அவர்கள் பதிவு செய்தனர். அவர்கள் பழைய குற்றவாளிகளின்  விரல் ரேகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்திற்கு சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News