மதுரையில் பலத்த மழை: பலவேறு பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
பல தெருக்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியும் சில இடங்களில் சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பெய்த மழையால் சோழவந்தான் மாரியம்மன் கோவில், வட்ட பிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி கழிவுநீருடன் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கழிவு நீர் கால்வாய் உள்ள அடைப்புகளை உடனடியாக அற்ற சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை நகரில் பல தெருக்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியும் சில இடங்களில் சேரும் சக அதிகமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவதி வருகின்றனர். இதில், மதுரை நகரில் மேலமடை, கோமதிபுரம், ஜூபிலி டவுன் மற்றும் திருப்பாலை, ஐயர் பங்களா பகுதிகளில் பல தெருக்களில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளன. மேலமடை வீரவாஜி தெரு ,காதர் மொய்தீன் தெரு, மருது பாண்டியர் தெரு, ஜூபிலி டவுன் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீரானது குளம் போல் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் சாலைகளில் செல்ல அச்சப்படுகின்றனர்.
அத்துடன் கால்வாய் மேல் முடிகள் சில இடங்களில் திறந்த நிலையில் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுகின்ற அவல நிலை ஏற்படுகிறது. இது குறித்து முதலில் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு குளம் போல நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை தேங்கிய பகுதியில் அமைச்சர் ஆய்வு: வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தங்குடி லேக் ஏரியா பகுதியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடனிருந்தனர்.