மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை!
மதுரை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.;
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
மதுரை அருகே திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், தேனூர், துவரிமான், அழகர்கோவில்,திருப்பாலை, காஞ்சரம்பேட்டை, மேலூர், வரிச்சூர், கருப்பாயூரணி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
மதுரை நகரில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முன்னதாக அதிகாலை நேரங்களில் பணிப்பொழிவும் இருந்தது. இதனால் இன்று பலத்த மழை ஒன்று இருக்கிறது என மக்கள் கணித்திருந்தனர்.
கொடைக்கானல் போல மாவட்டத்தின் பல பகுதிகளும் குளுகுளுவென ஆகிவிட்டது. மக்கள் குடைகளுடனேயே வெளியில் சென்று வந்தனர். மதுரை மாநகரிலும் பலத்த மழைக்கான அறிகுறிகள் இருந்தது. இந்த நிலையில் மாலை நெருங்க நெருங்க மேகங்களின் அடர்த்தி அதிகமாக கனமழை பெய்தது.
மதுரை நகரில் பலத்த மழையால், அண்ணாநகர்,தாசில்தார் நகர், வண்டியூர், யாகப்பா நகர், மேலமடை, புதூர், பழங்காநத்தம், பழைய குயவர் பாளையம் பகுதிகளில் மழை நீரானது, சாலையில் குளம் போல தேங்கின. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சாலைகள் மோசமான நிலையில் இருந்ததால், பொதுமக்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதியடைந்தனர். மழைக்கு முன்னே செப்பனிடப்படவேண்டிய சாலைகள் எதுவும் சரியாக இல்லை என மக்கள் புலம்பிச் சென்றனர்.